×

முகப்புவிளக்கை எரியவிட்டு செல்லும் பேருந்துகளால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் அச்சம்

 

கம்பம், பிப்.24: கம்பம் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டில் பேருந்துகள் முந்திச் செல்வதற்காக முகப்பு விளக்கு எரிய விட்டு செல்வதால் பெரும் விபத்து அபாயம் நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தேனி மாவட்டம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் தேனி மாவட்ட காவல் துறை சார்பாக தடுப்பு கம்பிகள் எனும் பேரிகார்டுகள் மற்றும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

போலீஸ் தரப்பில் அமைக்கப்பட்டுள்ள பேர்கார்டுகளில் முந்திச் செல்வதற்காக கனரக வாகனங்களான பேருந்துகள் மற்றும் சரக்கு லாரிகள் முகப்பு விளக்கை எரியவிட்ட வண்ணம் முன்னேறி வந்து கொண்டிருப்பதால், எதிரில் வரும் கார்கள், டூவீலர்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடனே தடுப்பு கம்பிகளை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, தமிழ் நாட்டிலேயே தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அதிக அளவில் தடுப்பு கம்பிகள், வேகத்தடைகள் உள்ளது தேனி மாவட்டம் தான்.

மாவட்டம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எதிரில் வரும் வாகனத்தை விட முந்தி செல்ல பெரும்பாலான அரசு தனியார் பேருந்துகள் அதிக வேகத்துடன் முகப்பு விளக்கை எரிய விட்டு வருகின்றன. இதனால் கார், பைக் ஓட்டுபவர்கள் நிலை தடுமாறி விபத்து அதிகளவில் ஏற்படுகிறது. இதனை தடுக்க அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும் என்றனர்.

The post முகப்புவிளக்கை எரியவிட்டு செல்லும் பேருந்துகளால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Gampam ,Theni district ,Dinakaran ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால்...